பலத்த காற்றால் வெற்றிலை தோட்டம் சேதம்... வேதனையில் விவசாயி தற்கொலை!

 
dead body

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பலத்த காற்றினால் வெற்றிலை தோட்டம் சேதமடைந்ததால் வேதனையில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா மிட்டாரெட்டி அள்ளி ஊராட்சி கோம்பெரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (55). விவசாயி. இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஜீவானந்தம் என்ற மகனும் உள்ளனர். பெருமாள், தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் வெற்றிலைத் தோட்டம் அமைத்து, சாகுபடி செய்து வந்தார்.

dharmapuri gh

இதனிடையே, கடந்த வாரம் மிட்டாரெட்டி அள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக பெருமாளின் தோட்டத்தில் இருந்த வெற்றிலை கொடிகள் முழுவதும் சாய்ந்து சேதமடைந்து உள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பெருமாள், நேற்று தோட்டத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பலத்த காற்றினால் வெற்றிலை தோட்டம் சேதமடைந்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.