பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம்: துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்!

 
trichy

துறையூரில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு பயனாளிகளிடம் லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு  உத்தரவிட்டு உள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் மணிவேல். இவர் பச்சமலை பகுதியில் உள்ள வண்ணாடு ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக தேர்வாகிய 15 பயனாளிகளிடம், தலா 3 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார். மேலும், இடத்தை ஆய்வு செய்யும் போது மீதமுள்ள பணத்தை தர வேண்டும் எனவும் அவர்களிடம் தெரிவித்தார்.

\suspend

இந்த காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் படம்பிடித்து சமுக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விசாரணை மேற்கொண்டார். அதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவேல் லஞ்சம் பெற்றது உறுதியானதை அடுத்து, அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.