அரசுப்பேருந்து ஒட்டுநர் மீது வழக்குப்பதிவு ; போக்குவரத்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தொமுச தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

 
cbe

கோவையில் அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது உரிய விசாரணை இன்றி வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து, தொமுச போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் பேரூர் ஆண்டிப்பாளையம் பகுதியை புஷ்பாராணி(42) என்பவருடன் நேற்று இருசக்கர வாகனத்தில் கோவை பெரியகடை வீதி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்துடன் இருவரும் சரிந்து சாலையில் விழுந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப்பேருந்தின் பம்பரில் சிக்கி இருவரும் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த புஷ்பாராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோகன்ராஜ் பலத்த காயமடைந்தார்.

தகவல் அறிந்த கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காயமடைந்த மோகன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியான பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து அரசுப்பேருந்து ஒட்டுநர் அஸ்வந்த்குமார் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.

cbe

இந்த நிலையில், பேருந்து ஒட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொமுச போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், நேற்றிரவு மேற்கு போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தெளிவாக பதிவாகி உள்ளதாகவும், பேருந்து அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பேருந்து பம்பர் சிக்கியதாகவும், இதற்கும் ஓட்டுநருக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தனர்.

ஆனால் ஒட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இதனால் அவரது எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, தொழிற்சங்கத்தினருடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.