ஈரோட்டில் அரசுப்பள்ளியில் சிமெண்ட் சிலாப் இடிந்து விபத்து... கட்டிடத்தை சீரமைக்கக்கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!

 
erode

ஈரோடு வீரப்பன்சத்திரம் பெண்கள் அரசுப் பள்ளியில் சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்ததை கண்டித்து, மாணவிகளின் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 8ஆம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி கட்டிடத்தின் முன் பகுதியில் உள்ள சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்துள்ளது. விடுமுறை தினம் என்பதால் அதிர்ஷட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

erode

இந்த நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள், சிமெண்ட் சிலாப் இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோர், திடீரென பள்ளி வளாகத்துக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, பள்ளிக்கட்டிடம் பழுதடைந்து காணப்படுவதாகவும், இதனால் கட்டிடம் எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தில் பெற்றோர்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், பள்ளியில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லை என்றும், இதனால் மாணவிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே, பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவும், போதிய கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.