ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாத்திரங்கள், கால்நடைகளுடன் குடியேற சென்ற பொதுமக்கள்!

 
hosur

ஒசூர் அருகே கல் குவாரி லாரிகளால் சாலை சேதமடைவதை கண்டித்து பொது மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ளது கொரட்டகிரி கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  இந்த கிராமத்தில் 6 கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், குவாரியில் இருந்து கல்ஏற்றி செல்லும் லாரிகளால் அந்த பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் கடும் அவதிக்குள்ளாகி வரும் கொரட்டகிரி கிராம மக்கள், லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

hosur

இந்த நிலையில், நேற்று  கிராமமக்கள், தங்களது பிள்ளைகள், கால்நடைகள் மற்றும் பாத்திரங்களுடன் கிராமத்தை காலி செய்து விட்டு, ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி கிராம மக்கள் நடை பயணமாக ஒசூர் நோக்கி சென்றதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார், போராட்டத்தில் பங்கேற்ற கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்த பிரச்சினை குறித்து ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்று கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.