பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவி ; 1 மணி நேரம் போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்!

 
girl fell into well

பெருந்துறை அருகே 100 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த 10ஆம் வகுப்பு மாணவியை, தீயணைப்புத்துறையினர் 1 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குன்னத்தூர் ரோடு, கிரே நகரை சேர்ந்தவர் மதுமிதா (15). இவர் பெருந்துறையில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மதுமிதா வீட்டின் அருகே அவர்களது தோட்டமும் உள்ளது. தோட்டத்தில் சுமார் 100 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தற்போது 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பெருந்துறை சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மதுமிதாவின் தோட்ட பகுதியில் சேரும், சகதியுமாக இருந்தது. இந்த நிலையில், நேற்று காலை 6.30 மணி அளவில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றுக்கு அருகே உள்ள மோட்டார் பொருத்திய ரூமில் உள்ள பெத்தானை போட சொல்லி மதுமிதாவின் தாய் அவரிடம் கூறியுள்ளார்.

girl

இதை அடுத்து, மதுமிதா பம்பு செட் ரூமுக்கு சென்று பெத்தானை அழுத்த சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் கால் வழுக்கி கிணற்றுக்குள் விழுந்தார். கிணற்றில் தண்ணீரில் தத்தளித்த மதுமிதா தன்னை காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என கூச்சலிட்டார். மகள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது தந்தை தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது கிணற்றில் இருந்து மகள் சத்தம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, எட்டிப் பார்த்தார். அப்போது, மதுமிதா தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்து போனார். 100 அடிக்கிணறு என்பதால் அவரால் கிணற்றில் இறங்கி மதுமிதாவை காப்பாற்ற முடியவில்லை.

உடனடியாக இதுகுறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கயிறை கட்டி இறங்கி சுமார் 1 மணி நேரம் போராடி மதுமிதாவை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தோட்டத்தில் குவிந்தனார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பின்னர் மதுமிதா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.