"கோவை இனி முதல்வர் ஸ்டாலினின் கோட்டை" - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!

 
senthilbalaji

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் மாநகராட்சி மாமன்ற, நகர்மன்ற மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் உடனான ஆலோசனை கூட்டம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், பையா கிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது - நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 96 சதவீத வெற்றி பெற்று இருக்கின்றோம். இது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. அதிமுக ஆட்சியில் எந்தவித அடிப்படை பணிகளும் செய்யப்படவில்லை. திமுக ஆட்சியில் கோவை மாவட்டம் முழுவதும் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

cbe

இன்றைய மாநகராட்சி, நகராட்சி,  பேரூராட்சிகளுக்கான பிரதிநிதிகளுடன் சந்திப்பில் அந்தந்த வார்டுகளில் உள்ள பொதுவான பிரச்சினைகள் தயாரிக்க சொல்லி உள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளுக்கான பணிகளை தயாரிக்க தெளிவான திட்டமிடப்படுகின்றது. இதுபோன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் பட்டியல் தயார் செய்து, சிறப்பு நிதி பெற்று மாவட்டம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கோவை மாவட்டத்தில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது. இதில் செயற்கை இயற்கை என்றும் எதுவும் இல்லை. கோவையில் வித்தியாசம் பார்க்காமல் தமிழக முதல்வர் அனைத்து பணிகளையும் செய்து கொடுத்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தி மாவட்ட வாரியாக பரிசுகள் வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, நீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளிக்கும். சூயஸ் நிறுவனம் குடிநீர் வழங்க மேற்கொள்ளும் பணிகள் முக்கால்வாசி நிறைவடைந்து விட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

senthilbalaji

மேயர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் விருப்ப கடிதத்தை அளித்து வருகின்றனர். கோவை அதிமுகவின் கோட்டை என மக்கள் சொல்லவில்லை. சில அதிமுகவினர் மட்டுமே சொல்கின்றனர். கோவை இனி முதல்வர் ஸ்டாலின் கோட்டை. இனிவரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் அதை நிச்சயம் உணர்த்துவார்கள்.

கடந்த  அதிமுக ஆட்சியில் புதிய மின்திட்டங்கள் மற்றும் விநியோகத்திற்கான திட்டங்கள் எதுவும் செய்யப்படவில்லை. திமுக அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான மின்தேவையை கணக்கிட்டு உற்பத்திக்கு தேவையான பணிகளை செய்து வருகிறது. மாவட்டம் தோறும் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் முதல் சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்கா அமைக்கப்ட உள்ளது. மேலும், குறிப்பிட்ட ஆதார் இணைப்பு உள்பட பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.