விருதுநகரில் தேசிய கைத்தறி கண்காட்சியை துவங்கி வைத்த ஆட்சியர் மேகநாத ரெட்டி!

 
vnr

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி துவங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,நேற்று 8-வது தேசிய கைத்தறி தினவிழா நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற, கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கைத்தறி ஆடைகளை பார்வையிட்டார்.  

vnr

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் மேகநாதரெட்டி, கைத்தறி ஆடைகள் கண்காட்சியில் பல ரகங்களில் பருத்தி சேலைகள், செயற்கை இழை பட்டுச்சேலைகள், கைத்தறி துண்டுகள், வேஷ்டிகள், லுங்கிகள் மற்றும் போர்வை ரகங்கள் ஏராளமாக விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்தார். இங்கு கைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்த ஆட்சியர் மேகநாத ரெட்டி, கைத்தறி துணிகளை அனைவரும் வாங்குவதன் மூலம், கைத்தறி நெசவு தொழில் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 பயனாளிகளுக்கு நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 நெசவாளர்களுக்கு ஒப்பளிப்பு ஆணைகளையும் வழங்கினார். மேலும், முத்ரா கடனுதவி திட்டத்தின்கீழ், 10 நெசவாளர்களுக்கு கடனுதவிகளையும் அவர் வழங்கினார். இக்கண்காட்சியில் கைத்தறி உதவி இயக்குநர் ரகுநாத் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.