மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக மூன்று சக்கர வாகனம் வழங்கிய ஆட்சியர்!

 
dpi

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியர் சாந்தி உடனடியாக மூன்று சக்கர வாகனத்தினை வழங்கினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாந்தி தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள், ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த முகாமில் சாலை வசதி, குடிநீர், பேருந்து வசதி பல்வேறு அடிப்படை வசதிகள் கோரியும், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தியும் பொதுமக்களிடம் இருந்து 447 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கிய ஆட்சியர் சாந்தி, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

dd

இந்த முகாமில் பங்கேற்ற தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கொட்டுமாரனள்ளி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முனுசாமி என்பவர், நடக்கவியலாத சூழ்நிலையில் தனக்கு 3 சக்கர வாகனம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அந்த மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட ஆட்சியர் சாந்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.7,900 மதிப்பிலான 3 சக்கர சைக்கிளை, மாற்றுத்திறனாளி முனுசாமியிடம் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட முனுசாமி, ஆட்சியருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து, வத்தல்மலை பால்சிலம்பு பழங்குடியின மக்களின் பயன்பாட்டிற்காக ரூ. 2 லட்சம் மதிப்பிலான பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (பொ) / திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.