ஈரோடு மூலப்பட்டறை சந்திப்பில் தொடர் போக்குவரத்து நெரிசல்... ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

 
traffic

ஈரோடு மூலப்பட்டறை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அந்த பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மூலப்பட்டறை சந்திப்பு பகுதியில் நாள்தோறும் வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பேருந்து நிலையம் அருகில் உள்ளதால், பேருந்துகள்  முறையாக கடந்து செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டு, ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கின்றன. இதன் காரணமாக இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது. மேலும், மூலப்பட்டறை சந்திப்பில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனைகளுக்கு கடந்து செல்வது மிகவும் கடினமான செயலாக உள்ளதால், உயிர் இழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.

erode corporation 

எனவே, இச்சந்திப்பின் ஐந்து புறரோடுகளிலிருந்து ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு கருதியும் மக்கள் நலனுக்காக போக்குவரத்து சீரமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சந்திப்பை சுற்றியும் சுகாதாரமான, ஆரோக்கியமான, தூய்மையான, சூழல் ஏற்படவும் ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஈரோடு மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ளதால், அந்த நோக்கம் நிறைவேற, ரவுண்டானா அமைக்கப்பட வேண்டிய அவசியமும், சூழலும் உள்ள நிலையில், இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்து காவல்துறை ஆகியோர் முடிவெடுத்து துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பாக உள்ளது.