தொடர் மழை எதிரொலி: குண்டேரிபள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டியது!

 
gunderipallam dam

தொடர் மழை காரணமாக ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 42 அடியை எட்டியது. இதேபோல், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  5,844 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. நீர்மட்டம் தொடர்ந்து 56 நாட்களுக்கு 102 அடியில் நீடித்து வந்த நிலையில், மழைப்பொழிவு இல்லாததால் நீர்வரத்து குறைந்து, நீர்மட்டமும் சரிந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நிர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

flood

இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.54 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 2,115 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று மேலும் அதிகரித்து 5,844 கனஅடியாக நீர் வரத்து வருகிறது. அணையிலிருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,500 கனஅடியும் என மொத்தம் 1,600 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதைப்போல் தொடர் மழைக்காலமாக மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக இங்கு 75. 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனை தொடர்ந்து, அணையில் இருந்து வினாடிக்கு 2,600 கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால், ஆற்றின் கரையோரத்தில் உள்ள வினோபா நகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்துர், தோப்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

flood

இதேபோல், 33.50 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது. இந்த  அணையும் கிட்டத்தட்ட நிரம்பும் தருவாயில் உள்ளது. மற்றொரு பிரதான அணையான பெரும்பள்ளம் அணை 22.97 அடியில் உள்ளது. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகள் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் - விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.