கோவையில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்!

 
cbe

பணி நிரந்தரம், கூலி உயர்வு உட்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடவும், அவர்களுக்கு ஆட்சியர் நிர்ணம் செய்த கூலி உயர்வை வழங்குதல் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

cbe

இந்த போராட்டம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 2 முறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் காந்தி ஜெயந்தி தினமான இன்று கோவை மாவட்டம் முழுவதும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கோவை மாநகர் பகுதி, நகராட்சி பகுதிகள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் சுகாதார பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

cbe

இந்த நிலையில், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் திரண்ட 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலையிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இந்த சம்பவம் காரணமாக மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.