பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் தம்பதி தூக்கிட்டு தற்கொலை... மதுரையில் சோகம்!

 
dead

மதுரையில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை பழைய குயவர்பாளையம் பச்சரிசிக்கார தோப்பை சேர்ந்தவர் நாகராஜன் (46). இவரது மனைவி லாவண்யா (34). இவர்களுக்கு ரக்‌ஷிதா, அர்ஜூன் என 2 குழந்தைகள் உள்ளனர். நாகராஜன் பங்குச்சந்தை ஆலோசகராக இருந்து வந்தார். மேலும், பங்குச்சந்தையில் அதிகளவு முதலீடு செய்து வந்துள்ளார். இதற்காக அவர் பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வந்தது. 

இதன் காரணமாக, நாகராஜனுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில், நேற்று காலை குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட்டு நிலையில், வீட்டில் இருந்த நாகராஜன், அவரது மனைவி லாவண்யா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே, நாகராஜனின் உறவினர்கள் அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது நீண்ட நேரமாகியும் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். 

madurai gh

அப்போது,  நாகராஜனும், மனைவி லாவண்யவும் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இதுகுறித்து, தெப்பக்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.  அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.