கோவை காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம்... ஜமேஷா முபீனுடன் இருந்த 4 நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

 
cbe blast

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியான ஜமேஷா முபின், தனது வீட்டிலிருந்து 4 நபர்களுடன் வெளியேறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று அதிகாலை சாலையில் சென்ற காரில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சம்பவம் நடைபெற்ற பகுதியை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், சம்பவம் குறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, சம்பவ பகுதியை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, போலீசாரின் விசாரணையில் கார் விபத்தில் இறந்தவர் உக்கடம் கே.எம்.நகரை சேர்ந்த ஜமேஷா முபீன் என தெரியவந்தது. 

cbe blast

இதனை தொடர்ந்து, போலீசார் அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர், சார்க்கோல் ஆகிய நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜமோஷா முபீன் வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது, சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக சனிக்கிழமை இரவு 11.25 மணி அளவில் ஜமேஷா முபீன் தனது வீட்டில் இருந்து 4 பேருடன் வெளியே வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

 அந்த சிசிடிவி காட்சியில், ஜமேஷா முபீன் உள்ளிட்ட 5 பேரும், அவரது வீட்டில் இருந்து மர்ம பொருட்களை எடுத்துச்செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இதனை அடுத்து, ஜமோஷா முபினுடன் சென்ற 4 மர்மநபர்கள் யார் என்பது குறித்தும், அவர்கள் எடுத்துச் சென்ற மர்ம பொருள் குறித்தும் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.