அன்னவாசலில் திமுக - அதிமுகவினர் இடையே மோதல்... பேரூராட்சி தலைவராக அதிமுக வேட்பாளர் தேர்வு!

 
annavasl

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி தலைவர் தேர்தலின்போது திமுக - அதிமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 15 இடங்களில் அதிமுக  8 இடங்களையும், திமுக கூட்டணி 6 இடங்களையும், ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர். தேர்தலுக்கு பின்னர் சுயேட்சை வேட்பாளர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு வழங்கினார். இதையடுத்து, பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடைபெற்றது.

இதையொட்டி, பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், தலைவர் தேர்வு குறித்து அதிமுக - திமுகவினர் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் வெடித்தது. இதனால், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனை அடுத்து, அவர்களை போலீசார் தடியடி  அங்கிருந்தவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

annavasal

இதனை தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த சாலை பொன்னம்மாள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். இதனை அடுத்து, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.