மகா சிவராத்திரியை ஒட்டி, வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி ; ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்!

 
velliangiri hills

மகாசிவராத்திரியை ஒட்டி கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், 2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து வருகின்றனர். 

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று, சாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா அச்சம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மகா சிவராத்திரி விழாவுக்கு பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் சிவராத்திரியை ஒட்டி பக்தர்கள் மலையேற, கோவை மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

velliangiri

இதையடுத்து, நேற்று காலை முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர். மலையேறுவதற்கு முன்பு பக்தர்கள் அனைவருக்கும் வனத்துறை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என ஆய்வு செய்து, அவ்வாறு கொண்டு செல்பவர்களிடம் பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

இதையடுத்து, ஏராளமான பக்தர்கள் குச்சியை ஊன்றியபடி 6 மலைகளை கடந்த 7-வது மலையின் உச்சியில் உள்ள சுயம்புலிங்கமாக உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்தனர். மலையேறும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர், கழிப்பிட வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கோவை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.`