பேருந்தில் டீசல் திருடிய விவகாரம் : அரசு பேருந்து ஓட்டுநர் தொமுச-வில் இருந்து நீக்கம்!

 
lpf

கோவை மாவட்டம் அன்னூரில் அரசுப் பேருந்தில் பெட்ரோல் திருடிய புகாரில் சிக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர், தொமுச தொழிற்சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தப்படும் அரசுப் பேருந்துகளில் டீசல் திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன் பேரில், பணிமனை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பணிமனையில் நின்ற பேருந்தில் டியூப் மூலம் ஒருவர் டீசலை திருடினார். இதனை கண்ட அதிகாரிகள், விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் அதே பணிமனையில் ஓட்டுநராக பணிபுரியும் பெரியசாமி என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரிடம் இருந்த 20 லிட்டர் டீசல் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், டீசல் திருட்டில் ஈடுபட்டதற்காக அவரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில், புகாருக்கு உள்ளான அரசுப் பேருந்து ஓட்டுநர் பெரிசாமியை, திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் இருந்து நீக்கி, மாவட்ட நிர்வாகிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

lpf

இதுகுறித்து  தொமுச கோவை மண்டல பொதுச்செயலாளர் பெரியசாமி விடுத்துள்ள அறிவிப்பில், அன்னூர் போக்குவரத்துக் கழக கிளையில் ஓட்டுநராக பணிபுரியும் பெரியசாமி, கோவை மண்டல தொமுச, திமுக மற்றும் தமிழக அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அறிந்து ஒட்டுமொத்த தொழிலாளிர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட ஓட்டுநர் பெரியசாமி, சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவருடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.