கோவை குற்றாலம் அருகே காட்டுயானை தாக்கி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் பலி!

 
dead

கோவை குற்றாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் காட்டுயானை தாக்கியதில் பரிதாபமாக  உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் காளிதாசன்(59). இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஷீபா(49) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.இந்த நிலையில், நேற்று காளிதாசனும், அவரது மனைவி ஷீபாவும் கோவை டவுன்ஹால் பகுதிக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளனர். பின்னர் சிறுவாணி செல்லும் பேருந்தில் கோவை குற்றலாம் வந்த நிலையில், காளிதாசன் தான் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக இறங்கியுள்ளார். ஷீபா பேருந்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

elephant

தொடர்ந்து, காளிதாசன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.  கோவை குற்றாலம் அருகே உள்ள சர்க்கார் போரத்தி என்ற இடத்தில் சென்றபோது, சாலையில் நின்றிருந்த ஒற்றை யானை திடீரென காளிதாசனை தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போளுவாம்பட்டி வனத்துறையில் அவரை மீட்டு காருண்யா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் காளிதாசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, காருண்யா நகர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். காட்டுயானை தாக்கி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் பலியான சம்பவம் சிறுவாணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.