சிறுத்தை நடமாட்டம் எதிரொலி... மருதமலை கோவிலுக்கு இரவு 7 மணிக்கு மேல் பக்தர்கள் செல்ல தற்காலிக தடை!

 
maruthamalai
 கோவை மாவட்டம் மருதமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து இரவு 7 மணிக்கு மேல் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் மருதமலை அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் இந்த தெருநாய்கள் திடீரென மாயமாகின. இதனால் அவற்றை சிறுத்தை இழுத்துச்சென்றிருக்க கூடும் என அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்தனர். இதனை தொடர்ந்து, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஊழியர்கள் ஆய்வுசெய்தபோது, கோவில் தங்கத்தேர் நிறுத்துமிடம் மற்றும் ராஜகோபுரம் பகுதிகளில் சிறுத்தை உலாவும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

maruthamalai

சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமடைந்தனர். மேலும், சிறுத்தை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மருதமலை கோவிலுக்கு செல்ல இரவு 7 மணிக்கு மேல் பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டு உள்ளனர்.

இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், அந்த பகுதியில் யானைகள், சிறுத்தைகள் கடந்து செல்வது வழக்கம் என்றும், அங்கு வனத்துறை குழுவினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர். கடந்த காலங்களில் 3 சிறுத்தைகள் ஒரே நேரத்தில் அப்பகுதியை கடந்துள்ளதாகவும், வனக்குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினர். இதனிடையே, கோவிலில் 7 மணிக்கு மேல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்பது குறித்து பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.