தவறுதலாக போல்ட் நட்டை விழுங்கிய எலக்ட்ரீசியன்... அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்!

 
cbe

கோவையில் எலக்ட்ரீசியனின் நுரையீரல் மூச்சு குழாயில் சிக்கிய போல்ட் நட்டை, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிறப்பு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். 

கோவை குனியமுத்துர் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன்(55). இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று சம்சுதீன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தவறுதலாக போல்ட் நட்டை விழுங்கி விட்டார். இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது விழுங்கிய போல்ட் நட், அவரது இடது நுரையீரல் வழியாக செல்லும் மூச்சு குழாயில் சிக்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, மருத்துவர்கள் குழு சம்சுதீனுக்கு மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் 15 நிமிட அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெற்றிகரமாக போல்ட் நட்டை வெளியே எடுத்தனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் நன்றாக உள்ளார்.

coimbatore gh

இந்த சிறப்பு அறுவை சிகிச்சையை காது மூக்கு தொண்டை பிரிவு பேராசிரியர் மருத்துவர் அலி சுல்தான் தலைமையில், மருத்துவர்கள் சரவணன், மயக்கவியல் மருத்துவர்கள் மணிமொழி செல்வன், மதனகோபாலன் மற்றும் மருத்துவக்குவினர் இணைந்து வெற்றிகரமாக செய்து முடித்தனர். சவால் மிகுந்த இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவ குழுவினருக்கு,  கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா பாராட்டு தெரிவித்தார்.