திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான யானை தந்தங்கள் பறிமுதல் - மூவர் கைது

 
elephant tusk

திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான 2 யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றதாக 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில்  சட்டவிரோதமாக யானை  தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக, திருப்பூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த  சுமை தூக்கும் தொழிலாளி அவிநாசியப்பன் உள்ளிட்ட மூவர் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனை அடுத்து, வனத்துறையினர் தந்தங்களை வாங்குவது போல நடித்து அவிநாசியப்பனிடம் விலை பேசினர். அப்போது, தந்தங்களுக்கு ரூ.80 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

இதனை அடுத்து, வனச்சரகர் செந்தில்குமாரிடம், அவினாசியப்பன் தந்தங்களை நேரில் கொண்டு வந்து காட்டியுள்ளார். அப்போது, அவினாசியப்பன், அவரது நண்பர்களான முருகன், வீரப்பன் ஆகியோரை கைதுசெய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான 4 அடி உயரமுள்ள 2 யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும்,  அவர்களிடம் இருந்த 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பிடிபட்ட நபர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

elephant

அப்போது, அவிநாசியப்பனிடம், தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அணுகி, தன்னிடம் உள்ள யானை தந்தங்களை வழங்கி, அதனை விற்பனை செய்து தரும்படி கூறியதும், இதனை, அவினாசியப்பன் தனது நண்பர்களான  முருகன், வீரப்பன் ஆகியோருடன் சேர்ந்து விற்பனை செய்ய முயன்றபோது வனத்துறையினரிடம் சிக்கியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, அவினாசியப்பனுக்கு தந்தங்களை கொடுத்த நபர் யார்? என்பது குறித்தும், அவர் இறந்த யானையில் இருந்து தந்தங்களை வெட்டினாரா? அல்லது தந்தங்களுக்காக யானை கொல்லப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.