கோவையில் வாகனஓட்டிகளிடம் பணம் வசூல் செய்த போலி எஸ்.ஐ. கைது!

 
fake si

கோவையில் முதலமைச்சர் பயணம் செய்த சாலையில் போலீஸ் எஸ்.ஐ. உடையில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த மில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். 

கோவை கருமத்தம்பட்டி சர்வீஸ் ரோடு அருகே நேற்று மாலை காவல்துறை சீருடையில் நின்றிருந்த இளைஞர் ஒருவர், தன்னை கருமத்தம்பட்டி காவல் நிலைய எஸ்.ஐ என கூறிக்கொண்டு வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டார். அவரது நடத்தையில் சந்தேகமடைந்த வாகன ஓட்டி ஒருவர், இது குறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

arrest

அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவரை கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (39) என்பதும், இவர் கோவை தெக்கலூர் பகுதியில் தங்கி அங்குள்ள ஸ்பின்னிங் மில் ஒன்றில் பணிபுரிவதும் தெரிய வந்தது. மேலும்,எஸ்.ஐ. சீருடையில் வாகன சோதனையில் ஈடுபட்டு பொதுமக்களிடம் பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது.

இதனை அடுத்து, கருமத்தம்பட்டி போலீசார் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இதனிடையே, நேற்று திருப்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோவையிலிருந்து இந்த சாலை வழியாகவே சென்ற நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி போலி எஸ்.ஐ வாகன சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.