பழங்குடி மக்களின் பாரம்பரிய இசைக்கு நடனமாடி அசத்திய ஆட்சியர் சமீரன்!

 
collector collector

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சேத்துமடை பழங்குடியின கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், பழங்குடி மக்களின் பாரம்பரிய இசைக்கு ஏற்ப ஆட்சியர் சமீரன் நடனமாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் செம்பாரை பாளையம் ஊராட்சி சேத்துமடை பழங்குடியினர் கிராமத்தில், 26 பழங்குடியின கிராம மக்களுக்கு சமுதாய உரிமை வழங்குவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று, மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் செம்பாரை பாளையம், நெல்லித்தொரை, வெள்ளியங்காடு உள்ளிட்ட 19 கிராம சபை குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும், மாவட்ட வன அலுவலர், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ரேஞ்சர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

cbe

இந்த ஆலோசனை கூட்டத்தில் மலை கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து குறித்தும், அங்கன்வாடி, பொது வழி, மருத்துவமனை, கோவில் பயன்பாட்டிற்கு தேவையான நிலங்களை வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து, சமுதாய உரிமை வழங்கிடவும் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், வனப்பகுதியில் வன கிராம மக்களின் பொருளாதாரம் மேம்பட தேன் சேகரித்தல், விறகு சேகரித்தல் போன்ற தொழில் செய்வதை ஊக்குவிக்கவும், வனத்தை பாதுகாப்பது குறித்தும் பழங்குடியின மக்களுக்கு  எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியரை வரவேற்கும் பொருட்டு பழங்குடியின மக்கள், தங்களது பாரம்பரிய இசையை வாசித்து நடனம் ஆடினர். அப்போது, அவர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் சமீரனும் நடனம் ஆடி, பழங்குடியின மக்களை உற்சாகப்படுத்தினார். இந்த சம்பவம் அங்கிருந்த பழங்குடியின மக்கள் மற்றும் அரசு அலுவலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.