நிலத் தகராறில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை... மிரட்டல் விடுத்த திமுகவினரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்!

 
vellore

வேலூர் அருகே நிலத் தகரறில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவருக்கு மிரட்டல் விடுத்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள பெரிய போடிநத்தம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி நாகேஷ்(50). இவரது நிலத்தின் அருகே கிருஷ்ணன் என்பவரது நிலம் உள்ளது. கிருஷ்ணனின் நிலத்திற்கு செல்ல பாதை விடுவது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் நாகேஷூக்கு சொந்தமான வாழை மரங்களை, கிருஷ்ணன் தரப்பினர் சேதப்படுத்தி உள்ளனர்.

 suicide

இது குறித்து நாகேஷ் மேல்பாடி காவல்  நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மேலும், காட்பாடி திமுக ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், பெருமாள்குப்பம் பஞ்சாயத்து தலைவர் கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் நாகேஷுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த நாகேஷ், நேற்று தனது நிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், நாகேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மேல்பாடி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்காண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதன் பேரில், போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, போலீசார் நாகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.