திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்!

 
farmers

திருச்சி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனிடையே கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்காததை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேசிய விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு, கடந்தாண்டு பெய்த அதிகப்படியான மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு இதுவரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் உள்ளதாகவும்,  60 வயதடைந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

farm

அதேபோல், கட்சி பாகுபாடு பார்த்து, விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கும் கூட்டுறவு வங்கி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாக கூறிய அவர், ஆனால் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் யாரும் வராததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். விவசாயிகள் தர்ணா போராட்டம் காரணமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.