4 வழிச்சாலை திட்டத்தை மாற்று பாதையில் அமைக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

 
tenkasi

ராஜபாளையத்தில் இருந்து செங்கோட்டை வரையிலான 4 வழிச்சாலை திட்டத்தை மாற்று பாதையில் அமைக்க வலியுறுத்தி, தென்காசியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் ராஜபாளையம் முதல் தென்காசி வரையில் உள்ள ஏராளமான விவசாய நிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், இதனால் சுமார் 1 லட்சம் தென்னை மரங்கள் வெட்டப்பட உள்ளது. இதனால், இந்த திட்டத்தை மாற்று பாதையில் அமைக்க வலியுறுத்தி, 4 வழிச்சாலை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் நேற்று தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

tenkasi

இதனை அடுத்து, நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினார். இதனால் தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி தலைமையில் வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், அச்சன்புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, விவாயிகளை பாதிக்கும் 4 வழிச்சாலை திட்டத்தை மாற்றுப்பாதையில் அமைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.  மேலும், தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்க விடாமல் தடுக்கும் போலீசாரை கண்டித்தும், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை ஒப்படைகக் உள்ளதாகவும் தெரிவித்தனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.