தொழிலதிபரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த தந்தை, மகன் கைது... ரூ.33 லட்சம் ரொக்கம், 24 பவுன் நகை பறிமுதல்!

 
robbery

திருப்பூர் அருகே தொழிலதிபரை தாக்கி பணம், நகைகளை கொள்ளையடித்த தந்தை, மகனை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.33 லட்சம் பணம் மற்றும் 24 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் பாஸ்கரன். இவர் கடந்த 28ஆம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் நிலம் வாங்குவதற்காக ரூ.33 லட்சம் பணம், 24 பவுன் நகை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, காரில் சென்றுள்ளார். காரை ஆனைமலையை சேர்ந்த பரத் (21) என்பவர் ஓட்டிச் சென்றார். திருப்பூர் மாவட்டம் மூலனுர் அடுத்த ஓசப்பாளையம் பகுதியில் சென்றபோது, நள்ளிரவில் மற்றொரு காரில் வந்த மர்மநபர், பாஸ்கரின் காரை வழிமறித்து அவரை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.33 லட்சம் பணம் மற்றும் 24 பவுன் நகையை பறித்துக் கொண்டு கொள்ளையன் தப்பிச்சென்றான். 

arrested

இதுகுறித்து பாஸ்கர் மூலனுர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் கார் ஓட்டுநர் பரத்திடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பரத், தனது தந்தையான ஆனைமலை மாசாணி அம்மன் கார்டனை சேர்ந்த குமார் உடன் சேர்ந்து பணம், நகையை கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, கார் ஓட்டுநர் பரத், அவரது தந்தை குமார் ஆகியோரை மூலனுர் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.33 லட்சம் பணம் மற்றும் 24 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.