கோவையில் வாயில் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த பெண் யானை உயிரிழப்பு!
கோவை போளுவாம்பட்டி வனப்பகுதியில் வாயில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த 10 வயது பெண் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை போளுவாம்பட்டி வனச்சரத்துக்கு உட்பட்ட முள்ளங்காடு வனப்பகுதியில் 10 வயது பெண் யானை வாயில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர் நேற்று காலை தாணிகண்டி அருகே பெண் குட்டியானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். தொடர்ந்து, வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
முதற்கட்ட ஆய்வில் அவுட்டுக்காய் போன்ற வெடிபொருளை கடித்ததால் யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது. மேலும், பெண் யானையின் நாக்கு மற்றும் வாய் பகுதியில் முற்றிலும் சேதமடைந்த நிலையில், அதற்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். யானையின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் முகாமிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவும் திட்டமிட்டு இருந்தனர்.
மேலும், யானை கண்டறியப்பட்ட முள்ளாங்காடு அருகே உள்ள தேவராயபுரம், வெள்ளருக்கம் பாளையம், ஜவ்காடு உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாய் வளவன் மற்றும் பயிற்சியாளர்கள் உதவியுடன் வெடிபொருட்கள் வைக்கப்பட்டு உள்ளதா? என வனத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் நாட்டுவெடி பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இன்று மதியம் பெண் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அடுத்து, கால்நடை மருத்துவர்களை கொண்டு இறந்த யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.