"கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் உரிமம் ரத்து"... அரியலூர் மாவட்ட உர விற்பனையாளர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

 
fertilizer shop

அரியலூர் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மற்றும் ஆதார் அட்டை இன்றி விற்பனை செய்யும் தனியார் உரக்கடைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூரில் அதிக விலையில் யூரியா விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து, தனியார் உரக்கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு விற்பனையை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டும் உரம் விற்பனை செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறிடும் உர விற்பனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fertilizers

உரங்களை வெளி மாவட்டங்களிலிருந்தும் கொள்முதல் செய்யக்கூடாது. 45  கிலோ யூரியா மூட்டையை ரூ.266-க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இணை பொருட்களையோ அல்லது வேறு பொருட்களையோ வாங்க விவசாயிகளை வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், நிலமற்ற நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.