கடனை செலுத்தாததால் டிராக்டரை பறிமுதல் செய்த நிதி நிறுவனம்... விரக்தியில் விவசாயி தற்கொலை!

 
farmer

விழுப்புரம் அருகே கடன் தவணை செலுத்ததால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை பறிமுதல் செய்ததால், வேதனையில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விழுப்புரம் மாவட்டம்  மேல்மலையனூர் அருகே உள்ள தேவனூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சின்னதுரை (22). இவர் கடந்த 2018ஆம் ஆண்டு செஞ்சியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்று, டிராக்டர் வாங்கி உள்ளார். கடனுக்கு தொடக்கத்தில் முறையாக தவணை செலுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சின்னதுரை சரிவர தவணை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

vilupuram

இந்த நிலையில், நேற்று சின்னதம்பி தனது நிலத்தில் உழுது கொண்டிருந்தபோது, அங்கு சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் அவரை தகாத வார்த்தைகளால் பேசி, டிராக்ரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சின்னதம்பி தனது நிலத்தில்  உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த  சின்னதுரையின் உறவினர்கள், தனியார் நிதி நிறுவனத்தினரை கண்டித்து தேவனூர் கூட்டு சாலையில் சடலத்தை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த வளத்தி காவல் நிலைய போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, நிதி நிறுவனத்துக்கு ரூ.1.20 லட்சம் மட்டுமே செலுத்த வேண்டிய நிலையில், அவர்கள் ரூ.3.50 லட்சம் செலுத்தக்கூறி வற்புறுத்துவதாக குற்றம்சாட்டினர். மேலும், பறிமுதல் செய்த டிராக்டரை திரும்ப கொடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.