மனைவி பிரிந்து சென்ற வேதனையில் பைனான்சியர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

ஈரோட்டில் மனைவி பிரிந்து சென்றதால் வேதனையில் நிதி நிறுவன அதிபர் தூக்கிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (51). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தங்கமணியின் தாய் உடல் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து, தங்கமணிக்கும், அவரது மனைவி வசந்திக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு, வசந்தி, மகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால், தங்கமணி தனியே வசித்து வந்துள்ளார். 

erode gh

மேலும், மனைவி - மகள் பிரிந்து சென்றதால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று நீண்ட நேரமாகியும் தங்கமணியின் வீட்டு கதவு மூடிக் கிடந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அவரது மனைவி வசந்திக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், வசந்தி மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வீட்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டில் தங்கமணி தூக்கிட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வசந்தி மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக தங்கமணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தங்கமணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனை வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.