கோவை ஆனைக்கட்டியில் இருவேறு இடங்களில் மானை வேட்டையாடிய 12 பேர் கைது... ரூ.2.75 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை!

 
hunting

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் 2 வேறு இடங்களில் மானை வேட்டையாடிய 12 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு ரூ.2.75 லட்சம் அபராதம் விதித்தனர்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ள துவைப்பதி பழங்குடி கிராமத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் மான்கறி விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், துவைப்பதி கிராமத்திற்கு சென்ற வனத்துறையினர் அங்குள்ள வீடு ஒன்றில் சோதனையிட்டபோது அங்கு சமைத்த நிலையில் புள்ளிமான் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், புள்ளிமான் இறைச்சி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் விசாரணையில் துவைப்பதியை சேர்ந்த முருகன்(49) என்பவர் புள்ளிமானை வேட்டையாடி, துவைப்பதியை சேர்ந்த துரைசாமி(65) மற்றும் ஆனைக்கட்டியை சேர்ந்த கருப்பராயன்(55). ஜெயக்குமார்(31), ஜெகநாதன்(39) உள்ளிட்ட 5 பேருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, முருகன் தோட்டத்தில் புதுக்கி வைத்திருந்த புள்ளிமான் தலை, கொம்பு, சுருக்குவலை மற்றும் கொடுவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, 6 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களை மாவட்ட வன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் புள்ளிமானை வேட்டையாடிய முருகனுக்கு ரூ.25 ஆயிரமும், இறைச்சியை வாங்கிய மற்ற 5 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரமும் என மொத்தம் ரூ.1.25 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

arrest

இதேபோல், நேற்று மாலை 7 மணி அளவில் ஆனைக்கட்டி பகுதிக்கு உட்பட்ட மூங்கில்பள்ளம் அருகே மான்இறைச்சி வீட்டில் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரெங்கசாமி(65) என்பவர் காங்கா கால்வாய் பகுதியில் உள்ள காப்புக்காட்டிற்கு வெளியே உள்ள ஓடை பகுதியில் வளர்ப்பு நாயை விட்டு, புள்ளிமானை கடிக்கச்செய்து,அதனை வேட்டையாடியது தெரியவந்தது.

தொடர்ந்து, மானின் இறைச்சியை தனது வீட்டின் அருகே உள்ள பாபு(40), சுப்பிரமணி(45), ராமு(30), சிவதாஸ்(37), மற்றும் கந்தசாமி ஆகியோருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, மானை வெட்டிய இடத்திற்கு ரங்காசமியை அழைத்துச்சென்ற வனத்துறையினர் அங்கிருந்த மான் கொம்பு, தலை மற்றும் தோல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, புள்ளிமானை வேட்டையாடி சமைத்த குற்றத்திற்காக ரெங்கசாமி உள்ளிட்ட 6 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1.50 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.