போலி விளம்பரம் மூலம் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.37 லட்சம் மோசடி... நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் கைது!

 
tuti

தூத்துக்குடியில் போலி வாட்ஸ்அப் விளம்பரம் மூலம் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பனிமய காட்வின் மனோஜ் (38). இவர் தூத்துக்குடியில் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், இவரது வாட்ஸ் எண்ணிற்கு வந்த விளம்பரத்தில் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள நிறுவனத்திற்கு, மகாராஷ்டிராவில் உள்ள சர்மா எண்டர்பிரைசஸ் மற்றும் சிக்கிமில் உள்ள கிருஷ்ணா இண்டஸ்ட்ரீயிலிருந்து மருந்துகளை பெற்று, அந்த   நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

arrest

இதனை நம்பிய காட்வின் மனோஜ், அந்த வாட்ஸ் அப் எண் மற்றும் மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டு,  ரூ.36.98 லட்சம் மதிப்பிலான பணத்தை அனுப்பிய நிலையில், பின்னர் அந்த நபரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காட்வின் மனோஜ், இது குறித்து தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். அதில் நைஜீரியாவை சேர்ந்த இசி பெடலிஸ் நுடுபுசி (Ese fidelis ndubuisi)என்பவர் வாட்ஸ்அப் மூலம் போலியான விளம்பரத்தை பதிவேற்றம் செய்து, போலியான வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 29ஆ-ம் தேதி மும்பையில் பதுங்கியிருந்த இசி பெடலிஸ் நுடுபுசியை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், போலீசாரின் விசாரணையில் கைதான நபர், பலரிடமும் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.