பல்லடம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மீது சரக்கு வேன் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உள்பட 4 பேர் பலி!

 
accident

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து இன்று அதிகாலை கோவைக்கு காய்கறிகள் ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் சென்று சென்று கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த புத்தரச்சல் என்ற இடத்தில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் எதிரே வந்த 2 இருசக்கர வாகனங்களின் மீது மோதிவிட்டு பள்ளத்தில் கவிழ்ந்தது.

palladam

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்த தொழிலாளி குமரேசன், மற்றொரு வாகனத்தில் வந்த கோவில்பட்டியை சேர்ந்த சமையல் தொழிலாளி முருகன், அவரது மனைவி முத்துமாரி, அவர்களது 3 வயது மகள் மகாதேவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், குமரேசனின் மனைவி ஆனந்தி பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த காமநாயக்கன் பாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஆனந்தியை மீட்டு சிகிச்சைக்காக  பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சரக்கு வேன் ஓட்டுநர் முருகானந்தத்தை தேடி வருகின்றனர். விபத்தில் சிறுமி உள்பட 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.