பொது வேலை நிறுத்தம் : கோவை மாவட்டத்தில் 80 சதவீதம் பேருந்துகள் இயங்கவில்லை!

 
bus strike

நாடு முழுவதும் 2 நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் இன்று துவங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் 80 சதவீத அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. 

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று முதல் 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு தமிழகத்தை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை 2 நாள் பொது வேலைநிறுத்தப்பட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி, கோவை மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள்,காப்பீட்டு துறை ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இதன் காரணமாக கோவையில் உக்கடம், சுங்கம், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட அனைத்து பேருந்து பணிமனைகளிலும் இருந்தும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. சுமார் 80 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். அத்துடன், கோவை மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர், வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால், நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

bus strike

இதேபோல், கோவை தெற்கு மற்றும் வடக்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கு உட்பட்ட அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் காந்தி சிலை மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும், வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பொது வேலைநிறுத்தத்தை ஒட்டி கோவை மாவட்டத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு