ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் கம்பம் பிடுங்குதல் விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

 
periya mariyamman

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, கோவில் கம்பங்கள் பிடுங்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் காரைவாய்க்காலில் விடப்பட்டன.

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில்  குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த, 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் ஒரு பகுதியாக கடந்த, 19ஆம் தேதி இரவு, பெரிய மாரியம்மன் மற்றும் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன் கோவில், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் கம்பம் நடப்பட்டது. இந்த கம்கத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி, பால் குடம் மற்றும் புனித நீர் எடுத்து வந்து புனித நீர் ஊற்றி, அம்மனை வழிப்பட்டு சென்றனர்.

periya mariyamman

இந்த நிலையில், 29ஆம் தேதி காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், மாவிளக்கு பூஜையும், சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டமும் நடைபெற்றது. இதனை அடுத்து, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதனையொட்டி, பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கப்பட்டு பன்னீர்செல்வம் பூங்கா வழியாக மணிக்கூண்டு சென்றடைடைந்தது. அதேபோல், சின்ன மாரியம்மன் கோவில், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் இருந்து பிடுங்கப்பட்ட கம்பங்கள் மணிக்கூண்டு வந்தடைந்தன. 

periya mariyamman

அங்கிருந்து 3 கோவில்களின் கம்பங்களும் புறப்பட்டு ஊர்வலமாக, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, மீனாட்சி சுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் சாலை, சுவஸ்திக் கார்னர், சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி சாலை, மணிக்கூண்டு, மண்டபம் வீதி, டவுன் போலீஸ் ஸ்டேஷன், அக்ரஹாரம் வீதி வழியாக காரைவாய்க்கால் சென்றடைந்தது. இதனை தொடர்ந்து, 3 கம்பங்களும் காரை வாய்க்காலில் விடப்பட்டன. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் ஈரோடு மாநகர் பகுதி விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று காலை 10.30 மணிக்கு மறு பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெற்றது.