சூளகிரியில் கண்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.11 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்; இருவர் கைது!

 
gutka

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கண்டெய்னர் லாரியில் கடத்திச்சென்ற ரூ.11 லட்சம் மதிப்பிலான 1,849 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து சூளகிரி வழியாக பல லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் கடத்திச்செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சூளகிரி காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார், நேற்று காமன்தொட்டி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

sulagiri

அப்போது, அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, கண்டெய்னரில் இருந்த ஏராளமான மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா புகையிலை பொருட்களை கடத்திச்செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து லாரியில் இருந்த ரூ.11.19 லட்சம் மதிப்பிலான 1,849 கிலோ குட்கா பொருட்கள், வெளி மாநில மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 மேலும், குட்காவை கடத்தியது தொடர்பாக பெங்களூரை சேர்ந்த சிவன்ன செட்டி (38), பிரதீபா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.