ஓசூரில் சரக்கு வேனில் கடத்திய ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - ஓட்டுநர் கைது!

 
gutka

ஓசூர் வழியாக சரக்கு வேனில் கடத்திச்சென்ற ரூ. 8 லட்சம் மதிப்பிலான ஒன்றரை டன் குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பூனப்பள்ளி சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு மத்திகிரி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, வேனில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்திச்செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து, 50-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் இருந்த 1,639 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

arrest

பறிமுதலான குட்காவின் மதிப்பு ரூ. 8.04 லட்சம் ஆகும். இவற்றை கடத்தியது தொடர்பாக சரக்கு வேன் ஓட்டுநர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மணி(30) என்பரை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், குட்கா பொருட்களை பெங்களுருவில் இருந்து சேலத்திற்கு கடத்திச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் குட்கா கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார்  தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.