ஓசூர் வழியாக லாரியில் கடத்திய ரூ.9.48 லட்சம் குட்கா பறிமுதல் - ஓட்டுநர் கைது!

 
gutka

பெங்களுருவில் இருந்து ஓசூர் வழியாக லாரியில் கடத்திச்சென்ற ரூ.9.48 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - ஆனேக்கல் சாலையில் உள்ள பூனப்பள்ளி சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் மத்திகிரி காவல் நிலைய ஆய்வாளர் சாவித்ரி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களுருவில் இருந்து அந்த வழியாக வந்த சரக்கு லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, சரக்கு வேனில்  இருந்த  ஏராளமான மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, லாரியில் இருந்த சுமார் 9 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

arrested

மேலும், குட்காவை கடத்திச்சென்றது தொடர்பாக லாரி ஒட்டுநர் சேலம் மாவட்டம் செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பெங்களுருவில் இருந்து சேலத்திற்கு குட்கா புகையிலை பொருட்களை கடத்திச்சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து, குட்கா கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.