கோவை மாநகரில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை... தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

 
cbe flood

கோவை மாநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக லங்கா கார்னர், உப்பிலிபாளையம் மேம்பாலங்களின் அடியில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கோவை நகரில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு சாரல் மழை பெய்ய துவங்கியது. கோவை மாநகரில் ராமநாதபுரம், சிங்காநல்லூர், உக்கடம், சுந்தராபுரம், குனியமுத்தூர் உட்பட நகரின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்தது. இரவு வரை மிதமான மழை நீடித்த நிலையில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால், நகரின் மையப்பகுதியான ரயில் நிலையம் அருகேயுள்ள லங்கா கார்னர் மற்றும் உப்பிலிபாளையம் மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

cbe flood

இதனை தொடர்ந்து, இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்துறையினர் ராட்சத மோட்டார் பம்புகள் மூலம், பாலங்களின் கீழே தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், துணை ஆணையர் சர்மிளா ஆகியோர் நேரில் பார்வையிட்டு மழைநீரை விரைந்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதேபோல், நேற்று இரவு பெய்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம் 3-வது முறையாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. 

cbe

இதேபோல் கோவை மாவட்டத்தில் நேற்று வால்பாறை, சோலையார், சின்ன கல்லார், மேட்டுப்பாளையம், சின்கோனா, அன்னுர், கோவை தெற்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை பிஏபி அணை பகுதிகளில் 7.3 செ.மீ. மழை பதிவாகியது. அதனை தொடர்ந்து,  வால்பாறை தாலுகாவில் 6.9 செ.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பகுதியில் 5.9 செமீ, சின்ன கல்லாறு பகுதியில் 5.5 செ.மீ, சோலையார் அணை பகுதியில் 5.3 செ.மீ, சின்கோனா பகுதியில் 5 செ.மீ மற்றும் கோவை தெற்கு பகுதியில் 4.2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.