ஈரோடு அருகே வனத்துறையினர் மீது வேட்டைக்கும்பல் துப்பாக்கிச்சூடு - ஒருவர் கைது, 4 பேர் தப்பியோட்டம்!

 
hunting

ஈரோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வேட்டைக்கும்பலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், தப்பியோடிய 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலாறு வனப்பகுதியில் நேற்று அதிகாலை சென்னம்பட்டி வனச்சரகர் ராஜா, வடக்குப்பிரிவு வனவர் பார்த்தசாரதி தலைமையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள், அட்டுக்கூட்டு சரகப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  வனப்பகுதியில் சிலர் சுற்றித்திரிவதை கண்ட வனத்துறையினர் அவர்களுக்கு எச்சரிக்கை எடுத்தனர். அப்போது, அந்த கும்பல் வனத்துறையினரை நோக்கி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். 

sennampatti

இதனை அடுத்து, வனத்துறையினர் அந்த கும்பலை துரத்திச் சென்றபோது ஒருவர் பிடிபிட்டார். அவரை சென்னம்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கோவிந்தப்பாடியை சேர்ந்த குமார் (40) என்பதும், தப்பியோடியவர்கள் கோவிந்தப்பாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா(42), நெட்டக்காலன் கொட்டாயை சேர்ந்த காமராஜ்(40), செட்டிப்பட்டியை சேர்ந்த தங்கபால்(42) மற்றும் தருமபுரி மாவட்டம் ஆத்துமேட்டூரை சேர்ந்த ரவி(45) ஆகியோர் என்பது தெரியவந்தது. 

மேலும், அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அங்கு வந்ததும், அவர்கள் மீது வன விலங்குகளை வேட்டையாடியது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. தொடர்ந்து, வனத்துறையினர் குமாரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.