மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு... முன்விரோதத்தில் காரை சேதப்படுத்திய இருவர் கைது!

 
mettupalayam

மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி நகர பொறுப்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பத்தில், முன்விரோதம் காரணமாக கார் கண்ணாடியை உடைத்த அந்த அமைப்பை சேர்ந்தவர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காமராஜர் நகர் நாடார் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ஹரிஷ்(21). இவர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் நகர பொறுப்பாளராக உள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இவரது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்ட காரின் கண்ணாடியை மர்மநபர்கள் சிலர் கற்களை வீசி உடைத்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஹரிஷ் தரப்பில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  அதன் பேரில், நேற்று கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

arrested

மேலும், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சந்தேக நபர்களின் செல்போன் எண்களை போலீசார் ஆய்வு செய்தும், புலன் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, ஹரிஷூக்கும், அதே பகுதியில் வசிக்கும் இந்து முன்னணியை சேர்ந்த  தமிழ்செல்வன்(24)  என்பவருக்கும், கடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் போது சிலை வைப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததும், அதனால் தமிழ்செல்வன், அவரது நண்பர் காமராஜர் நகரை சேர்ந்த ஹரிஹரன் (25) ஆகியோர் முன்விரோதம் காரணமாக ஹரிஷின் கார் கண்ணாடியை உடைத்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து, தமிழ்செல்வன், ஹரிஹரன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.