தருமபுரியில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு... 3 வாகனங்களின் தரச்சான்றிதழ் ரத்து!

 
dd

தருமபுரி மாவட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சாந்தி, முறையாக பராமரிக்காத 3 வாகனங்களின் தரச்சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தருமபுரியில் நேற்று தனியார் பள்ளி, கல்லூரி வானங்கள் ஆய்வு ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் தருமபுரி, பாலக்கோடு வட்டாரத்தில் உள்ள 204 வாகனங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.இந்த ஆய்வின்போது, பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்றும், அவசர கால வழி, வாகனத்தின் தரைதளம் மற்றும் தீயணைப்பு கருவி உள்ளிட்டவை முறையாக செயல்படுகிறதா? என்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

dd

தொடர்ந்து, தீயணைப்புத்துறை சார்பில் வாகனங்கள் தீப்பற்றினால் எவ்வாறு தீயணைப்பு கருவியை பயன்படுத்தி, தீயை அணைப்பது என வாகன ஓட்டுநர்களுக்கு செயல் விளக்கம்  அளிக்கப்பட்டது.இந்த ஆய்வின்போது, 204 பள்ளி, கல்லுரி வாகனங்கள் ஆய்விற்குட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் 22 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டு, அவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் சரிசெய்து, மீண்டும் ஆய்விற்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், முறையாக வசதிகள் மேற்கொள்ளாத 3 வாகனங்களுக்கு தரச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது.

அத்துடன், ஜுலை மாத இறுதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி வாகனங்களையும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டுமென உத்தரவிட்ட அதிகாரிகள், ஆய்விற்கு உட்படுத்தப்படாத வாகனங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தனர். இந்த ஆய்வில்  தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர், ராஜ்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.