நீட் தேர்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி விவாதிக்க தயாரா? - ஈரோடு பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் சவால்!

 
cm mkstalin

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை மூலம், அதிமுக அரசின் ஊழல் வெளிப்பட்டுள்ளதாக, ஈரோட்டில் காணொலி மூலம் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஈரோட்டில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சி , 42 பேரூராட்சி ஆகிய இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற காணொலி பிரச்சாரத்தை ஈரோடு மாவட்டத்தில் 108 இடங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

erode

பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் செய்து தருகிற கட்சி திமுக என்றும், தேர்தலுக்கான உருவான கட்சியல்ல திமுக என்றும் தெரிவித்தார். தமிழ் இனத்தின் இன உணர்வை தமிழ்மொழியை காக்க , அனைத்து வளங்களும் பெற்ற தமிழமாக மாற்ற உழைத்து வருவதாகவும், திமுக தற்போது 6-வது முறையாக ஆட்சியமைத்து முதல்வராக அமர்ந்து இருப்பதால் நவீன தமிழகத்தை உருவாக்கும் பொற்கால ஆட்சியாக இருக்கும் என்பதால் தமிழகத்தில் நிரந்தமான திமுக ஆட்சி தான் என்றும் கூறினார். மேலும், அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது 60% மேல் இடங்களில் வெற்றி பெற்றோம் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வந்தால் திட்டங்கள் மக்களை சென்றடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். 

எடப்பாடி பழனிசாமி பச்சை பொய் பழனிசாமி என்று சாடிய ஸ்டாலின், பொய் சொல்வதில் அவர் டாக்டர் பட்டம் பெறுவார் என்றும் கூறினார். மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து எடப்பாடி பொய் பேசி வருவதாகவும், திமுக - காங்கிரஸ் நீட் தேர்வை கொண்டு வந்தது போல் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பொய் பேசிகிறார் என்றும் தெரிவித்தார். நீட் தேர்வை நடத்த 2016 அவசர சட்டம் கொண்டு வந்தது பா.ஜ.க அரசு தான் என்ற ஸ்டாலின், ஜெயலலிதா நீட் தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, ஓராண்டு விலக்கு பெற்று கொடுத்தார். இதை தான் மறுக்கவில்லை என்றும் அவர் கூறினார். பா.ஜ.க-விடம் அதிமுக பதுக்கியது தான் நீட் தேர்வு, 4 ஆண்டுகளாக நடைபெற்றது என்ற ஸ்டாலின், இது தொடர்பாக என்னிடம் விவாதிக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.

cm

 இன்று வரை திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றி வருவதாகவும், திமுக ஆட்சி கொண்டு இலவச மின்சாரத்தை விவசாயிகள் கடந்த 30 ஆண்டுகளாக பயன்பெற்று வருகின்றனர் என்ற ஸ்டாலின், மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு முதலீடு தான் என்றார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் அதிமுக அரசின் ஊழல் வெளிப்பட்டு உள்ளதால், எண்ணற்ற முறைகேடுகள் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. இவர்கள் கையில் உள்ளாட்சி அமைப்பை கொடுத்துவிடாதீர்கள் என்ற ஸ்டாலின், பெரியாரின் சமூக நீதியின் உத்திரபிரதேசத்தில் எதிரொலிக்கிறது என்றார்.