"மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது அவசியம்" - திருவாரூர் ஆட்சியர்!

 
thiruvarur collector

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள அனைவரும், தங்களது ஆதார் எண்ணை, அடையாள அட்டை எண்ணுடன் இணைக்க வேண்டும் என ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைத்து திட்டங்களிலும் பயனடைய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள அனைவரும் தங்களது ஆதார் எண்ணை அடையாள அட்டை எண்ணுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இணைக்க வேண்டும்.

disable person

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை தொடர்ந்து பெற்றிட ஆதார் இணைத்தல் அவசியமாகும். மேலும், ஆண்டிற்கு ஒரு முறை வழங்க வேண்டிய மாற்றுத்திறனாளி உயிருடன் உள்ளார் என்று சம்மந்தப்பட்ட கிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சான்று பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகம் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் ஆகியவற்றுடன் அறை எண்.6, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருவாரூர் என்ற முகவரிக்கு 30.12.2022ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பித்து உதவித்தொகையினை தொடர்ந்து பெற்றிடவும், 

ஆதார் அட்டை எடுக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் எழுத்துப்பூர்வமாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்திட வேண்டும் என்றும் மாத உதவித்தொகை பெறுபவர்கள் மட்டுமின்றி UDID அட்டை பெறாத அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி தங்களது அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறலாம் என ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.