மணப்பாறை கருங்குளத்தில் ஜல்லிக்கட்டு: 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

 
jallikattu

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருங்குளத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருங்குளம் இஞ்ஞாசியார் தேவாலய திடலில் அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த போட்டியை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

jallikattu

போட்டியின் முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, இளைஞர்கள் தீரமுடன் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். சில காளைகள், களத்தில் நின்று விளையாடி மாடுபிடி வீரர்களை அச்சப்படுத்தின. இந்த போட்டியில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், சைக்கிள், ரொக்கப்பணம், தங்கக்காசு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த மாடுபிடி வீரருக்கு வாஷிங் மெஷினும், சிறந்த காளைக்கு பிரிட்ஜும் பரிசாக வழங்கப்பட உள்ளது. போட்டியில் காளைகள் முட்டியதில் காயமடைந்தவர்களுக்கு தயார் நிலையில் உள்ள மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.