காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவக்கம்!

 
pongal gift

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று தொடங்கிவைத்து, பொருட்களை வழங்கினார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

pongal gift

இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நியாய விலைக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000/- ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை 3 லட்சத்து 93 ஆயிரத்து 204 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு,  நியாய விலைக்கடைகளில் நாள்தோறும் 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில்  குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில்  பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான  புகார்களை 044 27238225 9043046100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.