கன்னியாகுமரி மக்கள் குறைதீர் கூட்டம்: 30 திருநங்கைகளுக்கு ரூ.15 லட்சம் மானியம் வழங்கிய ஆட்சியர்!

 
kumari

குமரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 30 திருநங்கைகளுக்கு சொந்தமாக தொழில் செய்ய ரூ.15 லட்சம் மானியத்தொகையை ஆட்சியர் அரவிந்த் வழங்கினார். 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பட்ட பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 340 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு, ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டார். தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் 30 திருநங்கைகளுக்கு சொந்தமாக தொழில் செய்வதற்கு மானிய தொகையை வழங்கினார்.

kumari

இதில் துணி வியாபாரம் செய்திட 17 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.8.5 லட்சம் மானியமாகவும், ஆடு வளர்ப்பு தொழிலுக்கு ஒருவருக்கு ரூ.50 ஆயிரமும், மாடு வளர்ப்பு தொழில் செய்ய 6 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் 3 லட்சம் மானியமாகவும், மீன் வியாபார விரிவாக்கத்திற்காக 4 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மானியமாகவும், புதிதாக தொழில் தொடங்க 2 நபர்களுக்கு தலா ரூ.50 வீதம் ரூ. 1 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. மொத்தம் 30 திருநங்கைகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான மானியத்தொகை, வருவாய் துறை சார்பில் ஒருவருக்கு விதவை உதவித்தொகை ஆணையை ஆட்சியர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவபிரியா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருப்பதி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.