மகாளய அமாவாசை - ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் லட்சக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடல்!

 
rameshwaram

புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் அதிகாலை முதலே லட்சக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாளான இன்று மறைந்த தங்களது முன்னோர்களுக்கு புனித நீர்நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. விரதம் இருந்து பிதுர்கர்மா பூஜை செய்தால் முன்னார்களின் ஆத்மா சாந்தி அடைவதுடன் அவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்றும், அதனால் அவர்கள் அகமகிழ்ந்து தங்களது குடும்பம் சிறப்பாக வாழ வாழ்த்துவர் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. 

rameshwaram

இந்த நிலையில், புகழ்பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், மகாளய அமாவாசையை ஓட்டி இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் புனித நீராடி, மறைந்த தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாத சுவாமி மற்றும் ஸ்ரீபர்வத வர்த்தினி அம்பாளை சரினம் செய்தனர். 

தர்ப்பணம் கொடுக்க தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் திரண்டதால் ராமேஸ்வரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் மற்றும் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மகாளய அமாவாசையை ஓட்டி ராமேஸ்வரத்தில் டிஎஸ்பி தனஜ்ஜெயன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.