மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி; தலைமறைவாக இருந்த தோட்ட உரிமையாளர் கைது!

 
elephant

கோவை தடாகம் அருகே தனியார் தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த தோட்ட உரிமையாளரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி கோவை மாவட்டம் தடாகம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானைகள்,  அருகில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்தன. அப்போது, அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி  12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது. தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வுசெய்தபோது, மின்வேலியில் உயர் அழுத்த மின்சாரம் வழங்கியதே, யானை உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்தது.

arrest

இந்த சம்பவம் குறித்து தனியார் தோட்டத்தின் உரிமையாளர் மனோகரன், அவரது மகன் நரேஷ் ஆகியோர் மீது வனத்துறையினர், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தந்தை, மகனை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதனிடையே வழக்கில் முன் ஜாமின் வழங்கக்கோரி, மனோகரன் கோவை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை, நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.

இதனால் கர்நாடகாவில் பதுங்கி இருந்த மனோகரன், இன்று காலை பேருந்து முலம் கோவை வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோவை வனச்சரகர் அருண்குமார் தலைமையில் வனத்துறையினர், பன்னிமடை பேருந்து நிறுத்தம் அருகே வைத்து மனோகரனை கைது செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக உள்ள அவரது மகன் நரேஷை தேடி வருகின்றனர்.